×

தூத்துக்குடியில் இருந்து 1,300 மெட்ரிக் டன் உரம் கோவை வந்தது

 

கோவை, டிச. 16: கோவை, திருப்பூர், மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு சரக்கு ரயில் மூலம் 1,300 மெட்ரிக் டன் உரம் வந்தடைந்தது. கோவை மாவட்டத்தில் விவசாய சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலமாக உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உரங்கள் வினியோகம் செய்ய கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,300 மெட்ரிக் டன் உரம் வடகோவை ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. ஸ்பிக் மற்றும் க்ரீன் ஸ்டார் உர நிறுவனம் மூலமாக கொண்டு வரப்பட்ட இதில் யூரியா, பாரத் டி.ஏ.பி, பாரத் காம்ப்ளக்ஸ், பாரத் சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் கொண்டு வரப்பட்டது. உரமூட்டைகளை வேளாண் அதிகாரிகள் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான அளவு பிரித்து அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு பெறப்பட்ட யூரியா உரம் அனைத்து வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், மானிய விலையில் உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தூத்துக்குடியில் இருந்து 1,300 மெட்ரிக் டன் உரம் கோவை வந்தது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Coimbatore ,Tirupur ,Nilgiri ,Dinakaran ,
× RELATED வனத்தில் கற்றாழை, துளசி காய்ந்தது